விவேகானந்தம்150
விவேகானந்தம் 150

எழுமின்! விழிமின்! நில்லாது உழைமின்!

விவேகானந்தர் பிறந்த நாள் விழா அவரது தியாகங்களை நினைவூட்டும்

-பிரணாப் முகர்ஜி

Pranab at Vivekananda House

கொல்கத்தா,  ஜன. 18:  மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு சுவாமி விவேகானந்தர் செய்த மகத்தான தியாகங்களையும் பங்களிப்புகளையும் அவரது 150-வது பிறந்த நாள் விழா நினைவூட்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார்.

கொல்கத்தாவில் விவேகானந்தரின் மூதாதையர் வசித்த வீட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் பேசியதன் விவரம்:

சுவாமிஜியின் உபதேசம் இக்காலத்துக்கும் மிகவும் பொருந்துவதாக உள்ளது. ஜாதி, மத, இன, தேச வேறுபாடின்றி உலகில் உள்ள அனைவருக்கும் அது பொருந்துகிறது. குருட்டு நம்பிக்கைகள், சகிப்புத் தன்மை இல்லாதிருத்தல் போன்றவற்றிலிருந்து மதத்தை மீட்டு அனைவரும் ஏற்கும் விதமாகச் செய்தார்.

இந்திய தத்துவத்தையும் கலாசாரத்தையும் லட்சக் கணக்கான மேற்கத்தியர் ஏற்கும்படிச் செய்தார். அவருடைய சிகாகோ உரையின் மூலமும் பின்னர் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் அவர் ஆற்றிய பணிகள் வழியாகவும், நவீன வாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்ப்பதில்  இந்தியாவின் பழமையான தத்துவங்களுக்கும் ஆன்மிக கலாசாரத்துக்கும் உள்ள முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார்.

இந்தியாவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அந்தப் பகுதி மக்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். நமது செறிவான கலாசாரத்தை சாதாரண மக்களும் அறிந்துகொள்ள அவர் செய்த முயற்சி வியக்கத் தக்கது.

அனைத்து இந்தியர்கள் இடையேயும் விவேகானந்தர் தேசிய உணர்ச்சியை ஊட்டினார். நமது தன்னம்பிக்கை தளர்ந்து, மேற்கத்திய நாடுகளை நாம் நோக்கிக் கொண்டிருக்கும்போது, நமக்கு நம்பிக்கையையும் பெருமிதத்தையும் தந்தார்.

பழமையில் நின்றுகொண்டு இந்தியாவின் உயர்வைப் பற்றிப் பேசிய அவர், மக்களின் பிரச்னைகளை நோக்கும் விதத்தில் மிகவும் நவீனமானவராக இருந்தார். அந்த வகையில் பழமைக்கும் புதுமைக்கும் இடையே சுவாமிஜி ஒரு பாலமாகத் திகழ்ந்தார் என்று பிரணாப் முகர்ஜி பேசினார்.

நிகழ்ச்சியில் மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன், பிரசார் பாரதி தலைவர் ஜவாஹர் சர்க்கார், ராமகிருஷ்ணா மிஷனைச் சேர்ந்த துறவிகள் கலந்துகொண்டனர்.

 நன்றி: தினமணி செய்தி (19.01.2013)

Tagged with: , , ,

No Comments Yet

You can be the first to comment!

Leave a comment

You must be logged in to post a comment.